Monday 23 September 2013

கல்யாண சீர்கள்

முதல் நாள்
"நாள் விருந்து" இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.
இரண்டாம் நாள்
"கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்"
.
இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழைதென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர்அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர்முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும்.பொதுவாக ஆல மரம்அரச மரம்பாலை மரங்களில் இது வெட்டப்படும்காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும் ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர்இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள்நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்துமஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர்.முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.
"கங்கணம் கட்டுதல்"
அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.
"நிறைநாழி செய்தல்"
வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்துநூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர்இது நிறைநாழி எனப்படும்இதனை ஒரு பேழையில் வைப்பர்அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.
"இணைச்சீர்"
இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும்மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர்இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார்இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார்இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும்.சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார்அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார்பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார்பின் இருவருக்கும் அருகு மணம் செய்து வைத்து இருவரையும் திருமண வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரிகொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார்தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர்மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்றுமணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.
மூன்றாம் நாள்

"முகூர்த்தம் இதை தாலி கட்டு" என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.
கைகோர்வை சீர், மங்கல வாழ்த்து, புலவனார் வாழ்த்து, மாப்பிள்ளை மச்சினன் விளையாட்டு போன்றவை விலாவாரியாக பின்னர் பதிக்கப்படும்.


  • தம் மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல்
  • மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல்
  • வாசல் கவுலி குறிப்பு கேட்டறிதல்
  • மாப்பிள்ளை வீட்டார் நிச்சயார்த்தம் மூலம் பெண்ணை உறுதி செய்தல்
  • அருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல்
  • திருமணநாள் குறித்து பெண் மடியில் வெற்றிலை கட்டுதல்
  • தட்டார் பூட்டும் தாலிக்கும் பொன்னோட்டம் பார்த்தல்
  • மணநாள் குறித்து தேன்பனை ஓலை எழுதல் (பத்திரிக்கைக் அச்சடித்தல்)
  • முகூர்த்த நெல் போட்டு வைத்தல்
  • விறகு வெட்டி பிளந்து மூன்று கத்தையாகக் கட்டுதல்
  • சம்மந்திகள் உப்புச்சக்கரை மாற்றி சிகப்பு பொட்டு வைத்தல்
  • மாப்பிள்ளை வீட்டில் பருப்பும் சோறும் விருந்துண்ணல்
  • பதினெண் கட்டுக் கன்னிகளுக்ளூக்குத் தாம்பூலம் கொடுத்தல்
  • பெண்ணெடுக்கும் மாமனுக்குத் தாம்பூலம் வழங்குதல்
  • இணைச்சீர் செய்யும் சகோதரிக்கும் தாம்பூலம் வழங்குதல்
  • பெண் கூரைச்சேலை சோமான் உருமாலை வாங்குதல்.
  • பெண் வீட்டில் பந்தல் போடுதல்
  • மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் புறப்படுதல்.
  • எழுதிங்கள்காரர், மூத்தோர் வீடுமெழுகுதல்.
  • எழுதிங்கள் சீர்சாமான்கள், நிறைநாழி, முக்காலி, மண்மேல்பலகை பேழைக்கூடைசீர், படி விநாயகர்பூஜை சேகரித்து வைத்தல்
  • விரதவிருந்து
  • மணமகள் வீட்டார் சீர்தண்ணீர் கொண்டுவருதல்
  • முகூர்த்தக்கால் வெட்டி வர மணமக்களின் வீட்டார்கள் பால் மரத்திற்கு பூஜை செய்தல்
  • வினாயகர் பூஜையுடன் மாப்பிளை வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
  • பசுமாட்டு சாணத்தில் தரைமெழுகி பிள்ளையார் பிடித்து அருகு சூடுதல்
  • மணமகன் வீட்டில் வெற்றிலை மூட்டை கட்டுதல்
  • மணமகள் வீட்டில் சீர்தண்ணீர் கொண்டு வருதல்
  • கணபதி பூஜையுடன் பெண் வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்
  • வெற்றிலைக் கூடையை பேழைக்கூடையில் வைத்து பூஜை செய்து பெண் மடியில் 30 வெற்றிலை கட்டி கணபதியை கும்பிடுதல்
  • மணமக்கள் வீட்டார் மணநாள் குறித்தல்
  • மாலை வாங்கல்
  • சிறப்பு வைத்தல், கரகபானை புடச்சட்டி வாங்குதல்
  • மேல்கட்டு கட்ட கட்டுக்கன்னிக்குத் தாம்பூலம் வழங்குதல்
  • பிரமன் பூஜை செய்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வருதல்
  • மணமகளுக்குத் தண்ணீர் வார்த்தல்.
  • மணமகனுக்கு முகவேலை செய்ய குடிமகனுக்கு தாம்பூலம் வழங்குதல், மணமகனுக்கு முகம் வழித்துத் தண்ணீர் வார்த்தல்
  • மணமகனுக்கு ஆக்கைப் போட்டு தண்ணீர் வார்த்தல்
  • மணமக்களுக்கு பட்டினி சாப்பாடு போடுதல்
  • குலதெய்வத்திற்கு குப்பாரி போடுதல்
  • கங்கணம் கட்டுதல்
  • நாட்டுக்கல் சீர் செய்தல்
  • மணமகனுக்கு செஞ்சோறு சுற்றி எரிதல்
  • இணைச்சீர் மணவறை அலங்காரம் மடியில் வெற்றிலை கட்டுதல்
  • மங்கள வாழ்த்தை குடிமகன் சொல்லுதல்
  • அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
  • தாயார் மகனுக்கு தயிர் அன்னம்  ஊட்டுதல்
  • மகன் தாயை வணங்கி, ஆசிபெற்று பூங்கொடிக்கு மாலை சூடல்
  • மணமகன் குதிரைமேல் செல்ல மடத்தான் குடைபிடித்தல்
  • நாழி அரிசிக்கூடை
  • மாப்பிள்ளையை விடுதி வீட்டிற்கு அழைத்துச் செல்லல்
  • பொன்பூட்ட வந்தவருக்கு பூதக்கலம் தான் படைத்தல்
  • தாய்மாமன் பால்பழம் உண்ணல்
  • மாமன் பொட்டிட்டு பொன்முடித்து பட்டம் கட்டி பெண் எடுத்தல்
  • வாசல் படியில் நெல் போடுவது
  • மணவறை அலங்காரம்
  • மணமக்களை அலங்கரித்தல்
  • மணமக்களை மணவறைக்கு அழைப்பது
  • சூரிய நமஸ்காரம் செய்து மணமகள் மணமகனின் கால் கழுவுதல்
  • மண்மேல் பணம்
  • ஓமம் வளர்த்தல்
  • மாங்கல்யத்திற்கு கணபதி பூஜை செய்தல்
  • வெண்சாமரம் வீசுதல்
  • தாசி சதுராடுதல்
  • மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அணிவித்தல்
  • பெரியோர்கள் ஆசிகூறல்
  • மைத்துனர் கைகோர்வை
  • மங்கள வாழ்த்து குடிமகன் சொல்லுதல்
  • அருகுமணம் எடுத்து வாழ்த்துதல்
  • மணமகளுக்கும் மணமகனுக்கும் கங்கணம் அவிழ்த்தல்
  • பாத பூஜை
  • தாரை வார்த்தல்
  • குங்குமம் இடுதல்
  • ஆரத்தி எடுத்தல்.
  • மணமக்கள் மணவறையைச் சுற்றி வருதல்
  • மணமக்களை இல்லத்திற்கு அழைத்தல்.
  • உள் கழுத்துதாலி அணிதல்.
  • மொய்காரி.
  • பரியம் செல்லுதல்.
  • ஊர்பணம்.
  • கூடைச்சீர்.
  • பந்தல்காரி  செலவு.
  • மணமகனுக்கும் மணமகளுக்கும் தண்ணீர் வார்த்தல்.
  • மணமக்களுக்கு புதுப்புடவை, சோமன் உருமாலை தரல்.
  • மணமகனுக்குச் மணமகள் தட்டுவாச்சாதம்  போடுதல்.
  • மணமன் மோதிரத்தை மைத்துனன் பிடுங்குவது.
  • கரகம் இறக்குதல்
  • மாப்பிள்ளை வீட்டில் பெண் காண்பது.
  • மணமக்களு தாயார் பால் அன்னம் ஊட்டல்.
  • மணமக்கள் விநாயகர் கோயிலில் வழிபடல்.
  • மணமக்களுக்கு மிதியடி அணிவித்தல்.
  • பெரியோர்களை தம்பதிகள் கும்பிட்டு மஞ்சள் நீராடுதல்.
  • வினாயகருக்கு மடக்கில் பானைப்பொங்கள் வைத்தல்.
  • வினாயகர் கோயிலில் சம்மந்தம் கலக்குவது.
  • மணமகள் எடுத்தமாமனுக்கு விருந்து வைத்தல்.
  • புலவர் பால் அருந்துதல்
  • மாமன் சீர்வரிசை.
  • பெற்றோர் மணமக்களுக்கு சீர்வரிசை
  • மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச்செல்லல்
  • மணமகள் ஊர் கிணற்றில் தாம்பூலம் விட்டு தண்ணீர் கொண்டு வருதல்
  • மணமக்களுக்குத் தண்ணீர் வார்த்தல்
  • மணமகள் விளக்கு ஏற்றுதல்
  • மணமக்களை பெண்வீட்டிற்கு அழைத்து வருதல்
  • சாந்தி முகூர்த்தம்
  • மாக்கூடை கொண்டு செல்லுதல்
  • மணமகன் சகோதரி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருதல்
  • குலதெய்வ கோயிலுக்கு கல்யாணபடி கொண்டு செல்லுதல்
  • மணமகள் வீட்டில் மணமகனுக்கு எண்ணெய் நீர் குளிப்பாட்டி விருந்து வைத்தல்
  • மணமகன் சகோதரி மணமக்களுக்கு விருந்து வைத்தல்
  • Sunday 22 September 2013

    கொங்கு கல்யாணத்தில் புலவனார்கள்

    புலவனார்கள் என்போர் கொங்கு நாட்டுக்கு வந்ததும் கொங்கு சமூகத்தில் அவர்களின் பங்கும் குறிப்பிட தகுந்ததாகும். காவிரியில் வெள்ளம் தீர்த்த கம்பருக்கு நன்றிக்கடனாக கொங்கு மக்கள் திருமண வரியாக சோழனுக்கு தர வேண்டிய வதுகை வரியை கம்பருக்கு தர சோழன் ஆவண செய்தான். மேலும் கம்பருக்கு தந்த வாக்குப்படி, புலவனார் என்னும் வம்சத்தை கொங்கு நாட்டில் குடியமர்த்தி நம் குடிபடைகளோடு அவர்களையும் போற்றி காத்து வந்தோம். புலவனார்களே அக்கால திண்ணைப்பள்ளி ஆசிரியர்கள். மக்கள் தவறு செய்யும் போது அதை இடித்துரைத்து திருத்துவதும், கவி எழுதுவதும் இவர்கள் தொழில்.

    புலவனார் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

    கொங்கு திருமணத்தில் புலவனார் பங்கு முக்கியமானது. முதலில் மாப்பிள்ளை அழைப்பின் போது அவர் முன்னாள் பாட்டு பாடி செல்வார். காணி புலவனார் வரவழைக்கப்பட்டு அவர் புலவனார் வாழ்த்து ஏர் எழுபது பாடி மணமக்களை வாழ்த்துவார். பின்னர் பால் அருந்தி பழம் சாப்பிட்டு செல்வார்.

    சேலம் மாவட்ட வெள்ளைக்கார கலக்டர் புலவனார் பற்றி எழுதிய குறிப்பு,



    மங்கல வாழ்த்திலும் புலவனார் பற்றிய குறிப்புகள் உள்ளது,

    "கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்
    தேம்பனை யோலை சிறக்கவே வாரித்"


    "பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டி
    திட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவர"


    "வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத்"

     இன்றும் பாரம்பரியம் உள்ள கொங்கு குடும்பங்கள் தங்கள் காணி புலவரை வரவழைத்து கல்யாணத்தில் பங்கு பெற செய்கிறார்கள். புலவனார் பார்மபரியம் அறிந்து கொண்டு பலரும் தங்கள் புலவனாரை தேடி கல்யாணத்தில் பங்கு பெற செய்கிறார்கள்.

    புலவனார் வாழ்த்து பாடல்:







    கொங்கு கல்யாணத்தில் பிராமணர்கள்

    கொங்கு திருமணங்களில் பிராமணர்கள் இல்லை என்று ஒரு கூட்டம் (திராவிட-முற்போக்கு கும்பல்) சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. கொங்கு மக்கள் என்று கொங்கு நாட்டுக்குள் ஆட்சியமைத்தார்களோ அன்றில் இருந்தே நம்மோடு வாழ்ந்து வருபவர்கள் நம் கொங்கு பிராமணர்கள். நமக்கு குலகுருக்கலாகவும், காணி கோவில் குருக்களாகவும் இருந்து கொங்கு சமூகம் ஒழுக்கமாக வாழ நல்வழி காட்டி வந்தனர். நம் கொங்க தேச பிராமணர்கள் பலர் நமக்கு குலகுருவாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நம் முன்னோர் செப்பேடு பட்டயங்கள் எழுதி கொடுத்து போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.

    கொங்க குலகுருக்கள் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

    கொங்கு வெள்ளாளர் திருமணத்தில் பிராமணர்கள் பங்கு குறித்து மங்கல வாழ்த்தில் குறிக்க பட்டுள்ளது.

    குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று"என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

    இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.



    மேலும் 'வேதம் ஓதிடும் வேதியர் வாழி' என்பதும் மங்கல வாழ்த்தில் வரும் வரியாகும்.

    மேலும் பிராமணர்கள் கொங்கு திருமணத்தில் பங்கெடுத்ததற்கு அத்தாட்சியாக அக்காலத்தில் எழுதப்பட்ட ஒரு சமூக ஆய்வு நூலின் ஒரு பகுதியையும் இங்கு காணலாம்.


    மங்கல வாழ்த்து






    காப்பு வெண்பா:

    நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
    அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
    தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
    நம்பிக்கை உண்டே நமக்கு.

    அகவல்பா:

    அலைகடல் அமிழ்தம் ஆரணம் பெரியவர்
    திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திடக்
    கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
    சந்திர சூரியர் தானவர் வானவர்
    முந்திய தேவர் மூவருங் காத்திட
    நற்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
    தப்பிதம் இல்லாமல் சரசுவதி காப்பாய்!
    சீரிய தினைமா தேனுடன் கனிமா
    பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
    சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்                                     10

    மிக்கதோர் கரும்பு விதவிதக் கிழங்கு
    எள்அவல் நெற்பொரி இனித்த பாகுடன்
    பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
    செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து
    ஆரமுது அருந்தும் அழகு சிறந்த
    பேழை வயிற்றுப் பெருமதக் களிறே
    அடியேன் சொல்லை அவனியில் குறித்துக்
    கடுகியே வந்தென் கருத்தினில் நின்று
    நினைத்த தெல்லாம் நீயே முடித்து
    மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!                                               20

    மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத
    என்குரு நாதன் இணையடி போற்றி
    கிரேதா திரேதா துவாபர கலியுகம்
    செம்பொன் மகுடம் சேரன் சோழன்
    பைம்பொன் மாமுடிப் பாண்டியன் என்னும்
    மூன்று மன்னர் நாட்டை ஆள்கையில்
    கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்
    சிறந்த மானிடம் தாயது கருப்பம்
    வாழ்வது பொருந்திச் சிறந்திடுங் காலம்
    இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்                                            30

    பக்குவம் ஆகிப் பருவங் கொண்டு
    திக்கில் உள்ளோர் சிலருங் கூடி
    வேதியன் பக்கமே விரைவுடன் சென்று
    சோதிடனை அழைத்துச் சாத்திரங் கேட்டு
    இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
    இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
    இருவர் பேரையும் இராசியில் கேட்டுக்
    கைத்தலம் ஓடிய இரேகைப் பொருத்தம்
    ஒன்பது பொருத்தம் உண்டெனப் பார்த்துத்
    தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
    வாசல் கௌலி வலிதென நிமித்தம்                                                 40

    தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
    குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
    உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டுப்
    பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து
    சிலபேர் உடனே சீக்கிரம் புறப்பட்டு
    வெண்கல முரசம் வீதியில் கொட்டத்
    தங்க நகரி தானலங் கரித்து
    முற்றமும் மனையும் முத்துகள் பரப்பிச்
    சித்திரக் கூடம் சிறக்க விளக்கி
    உரியவர் வந்தார் உன்மகளுக் கென்று                                             50

    பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
    நாளது குறித்து நல்விருந்து உண்டு
    பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
    வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே
    கற்றோர் புலவர் கணக்கரை அழைத்துத்
    தேம்பனை யோலை சிறக்கவே வாரித்
    திசைதிசை எங்கும் தென்னவரை அனுப்பிக்
    கலியாண நாளைக் கணித்துஅறி வித்தார்
    பாங்குடன் முகூர்த்தப் பாலக்கால் நாட்டித்
    தென்னம் குலையும் தேமாங் கொத்தும்                                           60

    பந்தல்கள் எங்கும் பரிவுடன் தூக்கி
    வாழை கமுகு வளர்கூந் தற்பனை
    மாவிலைத் தோரணம் மகரத் தோரணம்
    சோலை இலையால் தோரணங் கட்டி
    மூத்தோர் வந்து மொழுகி வழித்துப்
    பார்க்குமிடம் எங்கும் பால்தனைத் தெளித்துப்
    பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்
    கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி
    நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
    பாரிய வெல்லம் பாக்கு வெள்ளிலை                                                 70

    சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
    வாரியே வைத்து வரிசை குறையாமல்
    முறைமை யதாக முக்காலி மேல்வைத்து
    மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
    குணம் பொருந்திய குடிமகனை அழைத்துத்
    தெள்ளிய பாலால் திருமுகம் துடைத்தபின்
    அரும்பிய மீசையை அழகுற ஒதுக்கி
    எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக்
    குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து
    ஏழு தீர்த்தம் இசைந்திடும் நீரை                                                          80

    மேள முடனே விளாவியே வார்த்துச்
    செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து
    வண்ணப் பட்டுடை வத்திரந் தன்னை
    நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி
    மன்னவர் முன்னே வந்தவ ருடனே
    வாசல் கிளறி மதிப்புடன் கூட்டிச்
    சாணங் கொண்டு தரைதனை மெழுகிக்
    கணபதி தன்னைக் கருத்துடன் நாட்டி
    அருகது சூடி அருள்பொழிந் திடவே
    நிரம்பி யதாக நிறைநாழி வைத்து                                                       90

    வெற்றிலை பழமும் விருப்புடன் வைத்து
    அலைகடல் அமுதம் அவனியின் நீரும்
    குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து
    முளரி மெச்சிட முகமது விளங்கிடக்
    களரி வைத்துக் காப்பது கட்டிக்
    குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்துச்
    செப்பமுடன் மன்னவற்குத் திருநீறு காப்பணிந்து
    சாந்து புனுகு சவ்வாது பன்னீரும்
    சேர்த்துச் சந்தனம் சிறக்கவே பூசிக்
    கொத்தரளி கொடியரளி கோத்தெடுத்த நல்லரளி                               100

    முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ
    நாரும் கொழுந்தும் நந்தியா வட்டமும்
    வேரும் கொழுந்தும் வில்வ பத்திரமும்
    மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்
    புன்னை கொன்னை பூக்கள் எல்லாம்
    கொண்டு வந்து கொண்டை மாலை
    தண்டை மாலை சோபனச் சுடர்மாலை
    ஆடை ஆபரணம் அலங்கிருதம் மிகச்செய்து
    திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாழிவைத்து
    நட்டுமெட்டுத் தான்முழங்க நாட்டார்தன் நாட்டுக்கல்லை                110

    நன்றாய் வலம்வந்து நலமாக நிற்கையிலே
    செஞ்சோறு ஐந்துஅடை சிரமதைச் சுற்றித்
    திட்டி கழித்துச் சிவசூரி யனைத்தொழுது
    அட்டியெங்கும் செய்யாமல் அழகுமனைக்கு வந்து
    மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானமர்த்தி
    இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்துச்
    மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு
    ஆடை ஆபரணம் அழகுறத் தான்பூண்டு
    கூறை மடித்துவைத்துக் குணமுள்ள மங்கையவள்
    பேழைமூடி தான்சுமந்து பிறந்தவனைச் சுற்றிவந்து                         120

    பேழைதனை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி
    கூறைச்சேலைத் தலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து
    மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து
    அருமைப் பெரியவர் அழகுமாப் பிள்ளைகையை
    அரிசியில் பதியம்வைத்து ஐங்கரனைப் பூசித்து
    மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்குச்
    செங்கையால் அரிசியள்ளிச் சிறக்கக் கொடுத்திடுவார்
    வேழ முகத்து விநாயகர் தாள்பணிந்து
    சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
    இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு                                   130

    அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்
    முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோக்கிப்
    பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோக்கி
    இந்திரனார் தங்கை இணையோங்கி நின்றபின்பு
    தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்ல விநாயகனைப்
    பாங்காய்க் கைதொழுது பாரிகொள்ளப் போறமென்று
    மாதா வுடனே மகனாரும் வந்திறங்கிப்
    போதவே பால்வார்த்துப் போசனமும் தான்அருந்தித்
    தாயாருடை பாதம் தலைகுனிந்து தண்டனிடப்
    போய்வா மகனேஎன்றார் பூங்கொடிக்கு மாலையிடப்                          140

    பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
    மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவரத்
    தந்தை யானவர் தண்டிகை மேல்வரத்
    தமையன் ஆனவர் யானையின் மேல்வர
    நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போல்வரத்
    தேடியே வந்தவர்கள் தேரரசர் போல்வரப்
    பேரணி முழங்க பெரிய நகாரடிக்கப்
    பூமிதான் அதிர புல்லாங்குழல் ஊத
    எக்காளம் சின்னம் இடிமுரசு பெருமேளம்
    கைத்தாளம் பம்பை கனதப்புத் தான்முழங்கச்                                       150

    சேகண்டி திமிர்தாளம் சிறுதவண்டை ஓசையெழத்
    துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
    வலம்புரிச் சங்கநாதம் வகையாய் ஊதிவர
    உருமேளம் பறைமேளம் உரம்பை திடும்படிக்கப்
    பலபல விதமான பக்கவாத்திய முழங்கப்
    பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர
    வெள்ளைக்குடை வெண்கவரி வீதியில் வீசிவரச்
    சுருட்டி சூரியவாணம் தீவட்டி முன்னடக்க
    இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவரக்
    குதிரை மீதிவர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை                                        160

    சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்கக்
    கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர
    நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்
    பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட
    மேகவண்ணச் சேலை மின்னல்போல் பொன்னிலங்க
    அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவரப்
    பெண்ணு வீட்டார் பிரியமுடன் எதிர்வந்து
    மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து
    எதிர்ப்பந் தத்துடன் எதிர்மேளம் முழங்க
    உடந்தையாய் அழைக்க ஒருமன தாகிப்                                                 170

    பந்து சனங்கள் பண்புமித் திரர்வர
    வந்தனை ஆன வாத்தியம் ஒலிக்கப்
    பட்டன் புலவன் பண்பாடி தக்கைகொட்டி
    திட்டமாஞ் சோபனஞ் செப்பிமுன் னேவர
    அரம்பை மேனகை அணிமிகும் திலோத்தமை
    திறம்பெறும் ஊர்வசித் தெரிவையர்க்கு ஒப்பாய்
    வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று
    நன்மைசேர் பரத நாட்டியம் ஆடிட
    வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி
    வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும்என்றார்                                  180

    நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்
    பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிக்கு
    நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்
    பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
    பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
    சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
    முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
    திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று
    அட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
    அருமைப் பெரியவரும் அன்ன நடையாரும்                                          190

    பெருகும் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று
    இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்
    சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்
    கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்
    கண்டுமனம் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்
    நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்
    பூட்டுமென்றார் தோடெடுத்துப் பொன்னவளின் திருக்காதில்
    அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
    ஆணிப் பொன்னாளை அலங்கரித்துக் குலங்கோதிச்
    சாந்துப் பொட்டிட்டுச் சவ்வாது மிகப்பூசி                                                 200

    ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை
    பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
    அன்பாக வெற்றிலை அடைக்காயும் தான்கொடுத்தார்
    தாய்மாமன் தன்னைத் தன்மையுடன் அழைத்து
    சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுத்துப்
    பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலாட்குப்
    பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
    ஆரணங்குப் பெண்ணை அலங்கிருதம் மிகச்செய்து
    மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
    வலமதாய் வந்து நலமதாய் நின்று                                                           210

    செஞ்சோறு ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து
    நிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்து
    அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து
    மங்கள கலியாண மணவறையை அலங்கரித்து
    அத்தியடித் துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு
    பஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கி
    மாந்துளிர்சேர் பூங்கொத்து வண்ணமுள்ள பட்டாடை
    மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங் கட்டிஉள்ள
    அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்
    பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்துச்                         220

    சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
    செம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே
    வீர இலக்குமி விளங்கிடும் வாசலிலே
    விருதுகள் வழங்கிடும் விருப்பமுள்ள வாசலிலே
    தரணியில் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே
    பன்னீரா யிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே
    நாட்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்
    பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டுச்
    சாலுங் கரகமும் சந்திர சூரியரும்
    அம்மி வலமாக அரசாணி முன்பாக                                                           230

    ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாகச்
    சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்
    பத்தியுடன் அத்தனையும் பாரித்தார் மணவறையில்
    மணவறை அலங்கரித்து மணவாளனை அங்கிருத்தி
    அழகுள்ள மணப்பெண்ணை அலங்காரம் பலசெய்து
    மாமன் எடுத்து மணவறை சுற்றிவந்து
    மகிழ்ச்சியது மீதூற வலதுபுறம் தானிருத்திக்
    குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க
    இராமன் இவரோ! இலக்குமணன் இவரோ!
    கண்ணன், இந்திரன், காமன் இவர்தானோ!                                                 240

    கார்முகில் இவரோ! காங்கேயன் இவர்தானோ!
    என்றே பாரிலுள்ளார் ஏத்திப் பாராட்ட
    அத்தை மகள்தனை அழகுச் செல்வியை
    முத்து இரத்தினத்தை முக்காலிமேல் இருத்திக்
    கணபதி முன்பாகக் கட்டும்மங் கிலியம்வைத்து
    அருமைப் பெரியவர் அன்புடன் வழிபட்டு
    மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்திக்
    கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று கொட்டியார்ப்ப
    மாணிக்க மாங்கல்ய வைடூர்யத் திருப்பூட்டி
    மாலைதனை மாற்றி மணவறையில் அமர்ந்தபின்னே                            250

    மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவெனத் தானழைத்துக்
    கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டுச்
    சிங்கார மானபெரும் தெய்வச் சபைதனிலே
    "கங்காகுலம் விளங்க"க் கம்பர்சொன்ன வாழ்த்துரைத்து
    மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி
    மறையோர் வேதம்ஓத மற்றவர் ஆசிகூறப்
    பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து
    அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்னர்
    கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்துத்
    தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து                           260

    உரியதோர் பாட்டன் இருவருடை கைதனிலே
    தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
    பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து
    செங்கை யினாலே சிகப்பிட்டு இருவருக்கும்
    மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று
    சாப்பாடு போசனம் சந்தோச மாய்ப்போட
    உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்
    கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செலுத்துமென்றார்
    மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் இருந்து
    கலியாணத்தார் தம்மைக் கருத்துடனே அழைத்து                                     270

    கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்
    அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து
    பணமது பார்த்துக் குணமது ஏற்றுக்
    கல்லு வராகன் கருவூர்ப் பணமும்
    வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
    சம்மன் கட்டி சாத்தூர் தேவன்
    உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
    ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
    ஒருவிழி விழிக்க ஒருவிழி பிதுங்கப்
    பலவகை நாணயமும் பாங்காய்த் தெரிந்து                                                 280

    முன்னூறு பொன்முடிப்பு ஒன்றாய் முடிந்தவுடன்
    பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்
    பந்தல் பல்லி பாக்கியம் உரைக்க
    மச்சினன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்திருக்கச்
    சிற்றடிப் பெண்கள் சீர்கள் சுமந்துவரச்
    சந்தோ சமாகித் தங்கமுடி மன்னவர்கள்
    பந்தச் செலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
    ஆடுவான் பாடுவான் ஆலாத்தி யுட்பட
    நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே
    தனிப்பணம் தான்கொடுத்துத் தங்கிஇரும் என்றார்                                      290

    வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்துத்
    திடமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு
    அரிசி அளந்தார்கள் அனைவோரும் தானறிய
    கரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கும்
    புடவைதனைக் கொடுத்துப் பொற்பாய்த் தலைமுழுகிச்
    சட்டுவச் சாதம் தளிர்க்கரத்தால் மாப்பிள்ளைக்கு
    இல்லத்தாள் பரிமாறி இனிதுண்டு இளைப்பாறிப்
    பண்ணை மாதிகனைப் பண்பாகத் தானழைத்து
    வில்லை மிதியடிகள் மிகவே தொட்டபின்பு
    காலும் விளங்கக் கன்னியைத் தானழைத்து                                                  300

    மஞ்சள் நீராட்டி மறுக்கஇரு அழைப்பழைத்து
    மாமன் மார்களுக்கு மகத்தான விருந்துவைத்து
    மங்கல சோபனம் வகையாய் முடிந்தவுடன்
    மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
    துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
    பஞ்சவண்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டாடை
    அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
    இந்திர வண்ணப்பட்டு ஏகாந்த நீலவண்ணம்
    முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
    பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை                                                       310

    கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்
    வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்
    காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
    குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்
    நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!
    எல்லாச் சீரும் இயல்புடன் கொடுத்து
    அடைவுடன் வரிசைபெற்ற அழகு மணவாளன்
    மக்கள்பதி னாறும்பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க!
    வாழி மணமக்கள் வந்தவர்கள் வாழ்த்துரைக்க!
    ஆல்போல் தழைதழைத்து, அருகுபோல் வேர்ஊன்றி,
    மூங்கில்போல் கிளைகிளைத்து, முசியாமல் வாழ்ந்திருக்க!                        321

    --மங்களவாழ்த்து முற்றும்--

    வாழ்த்துரை:

       ஆதி கணேசன் அன்புடன் வாழி!
          வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி!
          எம்பெரு மானின் இணையடி வாழி!
          மாது உமையவள் மகிழ்வுடன் வாழி!
          திருவுடன் பெருமாள் சேவடி வாழி!
          முப்பத்து முக்கோடித் தேவரும் வாழி
          நாற்பத் தெண்ணாயிரம் ரிசிகளும் வாழி!
          வேதம் ஓதிடும் வேதியர் வாழி!
          பாரத தேசம் பண்புடன் வாழி!
          கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி!
          காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி!
          வேளாள குலதிலகர் வேளாண்மை வாழி!
          மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி!
          வாழிய யானும் மகிழ்வுடன் வாழி!
          என்குரு கம்பர் இணையடி வாழி!
          வையத்து மக்கள் மற்றவரும் வாழி!
          வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!

          இப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே!

    மரபு கல்யாணமா-விளம்பர கல்யாணமா?


    மரபு திருமணமா-விளம்பர திருமணமா ? 

    ***********************************
    எளிமையாக நூறு பேரை அழைத்தாலும், வீட்டில அருமைகாரர்-குலகுரு நடத்தி வைக்க, மங்கள வாழ்த்து முழங்க, கொங்கு மரபுப்படி அனைத்து சீரும் செய்யப்பட்டு நடப்பதே திருமணம்.



    ஐந்தாயிரம் பேரை அழைத்து ஐயரை வைத்து ஐம்பது லட்சம் செலவழித்து செய்யபடுவது வெறும் விளம்பரம், திருமணமல்ல.



    கம்பர் நமக்கென ஓதி தந்த மங்கள வாழ்த்து இருக்க, கவுண்டர்களுக்கென தனித்துவமாக சீர் முறைகளும் இருக்க, அதை நடத்தி வைக்க காலம் முழுக்க நெறிமுறைகளோடு வாழும் அருமைகாரர்களும், குலகுருக்களும் இருக்க நாம் ஏன் கலாசார அடிமைகளாக பிற முறைகளை தேடி அலைய வேண்டும்? லட்சகணக்கில் தோரணம்-அலங்காரம், பிச்சைகாரன்போல தட்டை ஏந்தி பப்பேவும் போடுவதில் என்ன பெருமை வந்துவிட்டது? திருமண பத்திரிகை என்பது நிகழ்ச்சியின் விபரங்களை தெரிவிக்கவே. அதில் தனது சொத்து பட்டியல், பதவி, கல்வி என்று டமாரம் அடிப்பது தேவைதானா..? பத்திரிக்கைக்காகவே பட்டம் ‘வாங்கும்’ போலி கல்வி தேவைதானா..?

    இவ்வளவு செலவு செய்து விளம்பரம் செய்வதால் யாருக்கு என்ன பயன்..? நம் உறவுகளுக்குலேயே போட்டி-பொறாமை-ஏக்கம்-தாழ்வி மனப்பான்மை தான் வளரும். நம் உறவுகளின் தவிர்க்க இயலா தேவைகளுக்கு கூட பத்து பைசா தர யோசிப்பவர்கள் திருமணத்திற்கு லட்சங்களை வெறும் ஆடம்பரதுக்கு வாரி இரைப்பது மனசீர்கேட்டின் உச்சம். 

    பாசத்தால் தன் பிள்ளைகளுக்கு சிறப்பாக திருமணம் செய்ய வேண்டும் ஆசையால் துவங்கிய இந்த விளம்பர திருமணங்கள் அவன் செய்கிறான் என இவனும் இவன் செய்கிறான் என இன்னொருத்தனும் என சங்கிலி தொடராக இன்று எங்கோ போய் நிற்கிறது. மாட்டுக்கறி தின்றுவிட்டு மாதம் ஒரு மனைவி என்று திரிவது தவறாக கருதப்படாத மேற்குலகின் உடையான கோட்டை போட்டு வருவதும் வடக்கின் குர்தாவை போட்டு வருவதும் பெருமையாக நினைப்பது நாம் எவ்வளவு தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறோம் என்பதற்கு உதாரணம் மட்டுமல்ல அசிங்கமும் கூட. பிழைப்புக்குத்தான் அவன் ஆடைகளை உடுத்தி தொலையும் கட்டாயம் என்றால் திருமணத்திலும் இவை தேவைதானா?. நாளை அவர்கள் கலாசாரத்தில் நடக்கும் அவலங்களையும் நம் வாழ்வில் சந்தித்து/சகித்துக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

    இப்படிப்பட்ட விளம்பர திருமணங்கள் தேவையா சொந்தங்களே?

    “என்னடா பெருமை ஏகநாதா ன்னா, சோத்து பெருமை டா சொக்க நாதா” ன்னு சொன்னானாம். அதுதான் நினைவுக்கு வருகிறது!

    ஆடம்பர திருமணங்கள் மாற வேண்டும். அந்த மாற்றம் சமூகத்தில் பிறரை கவரும் நிலையில்/அதிகம் கவனிக்கப்படும் / பொருளாதார வளம் உள்ள கொங்கு மக்களே முன்னெடுக்க வேண்டும். 

    நம் மரபுகளும்-சடங்குகளும்தான் நமக்கு அடையாளம்-பெருமை. இன்று பணத்தையும், பதவியையும், ஆடம்பரத்தையும் முன்னிறுத்தியே கவுரவ ‘பிச்சை’ தீர்மானிக்கபடுகிறது. மாறாக இனி நம் மரபுகளையும் ஒழுக்கத்தையும் கொண்டு கவுரவம் கட்டப்பட வேண்டும்!

    (இந்த பதிவு சிலரை புண்படுத்தும் என்பதும் விமர்சனங்களை கொண்டு வரும் என்பதும் தெரியும். மயிலிறகால் நீவி எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. இது நம் கொங்கு உறவுகளுக்குள் நல்லிணக்கம் வர தேவைப்படும் அவசிய மாற்றம்.