Sunday, 22 September 2013

மரபு கல்யாணமா-விளம்பர கல்யாணமா?


மரபு திருமணமா-விளம்பர திருமணமா ? 

***********************************
எளிமையாக நூறு பேரை அழைத்தாலும், வீட்டில அருமைகாரர்-குலகுரு நடத்தி வைக்க, மங்கள வாழ்த்து முழங்க, கொங்கு மரபுப்படி அனைத்து சீரும் செய்யப்பட்டு நடப்பதே திருமணம்.ஐந்தாயிரம் பேரை அழைத்து ஐயரை வைத்து ஐம்பது லட்சம் செலவழித்து செய்யபடுவது வெறும் விளம்பரம், திருமணமல்ல.கம்பர் நமக்கென ஓதி தந்த மங்கள வாழ்த்து இருக்க, கவுண்டர்களுக்கென தனித்துவமாக சீர் முறைகளும் இருக்க, அதை நடத்தி வைக்க காலம் முழுக்க நெறிமுறைகளோடு வாழும் அருமைகாரர்களும், குலகுருக்களும் இருக்க நாம் ஏன் கலாசார அடிமைகளாக பிற முறைகளை தேடி அலைய வேண்டும்? லட்சகணக்கில் தோரணம்-அலங்காரம், பிச்சைகாரன்போல தட்டை ஏந்தி பப்பேவும் போடுவதில் என்ன பெருமை வந்துவிட்டது? திருமண பத்திரிகை என்பது நிகழ்ச்சியின் விபரங்களை தெரிவிக்கவே. அதில் தனது சொத்து பட்டியல், பதவி, கல்வி என்று டமாரம் அடிப்பது தேவைதானா..? பத்திரிக்கைக்காகவே பட்டம் ‘வாங்கும்’ போலி கல்வி தேவைதானா..?

இவ்வளவு செலவு செய்து விளம்பரம் செய்வதால் யாருக்கு என்ன பயன்..? நம் உறவுகளுக்குலேயே போட்டி-பொறாமை-ஏக்கம்-தாழ்வி மனப்பான்மை தான் வளரும். நம் உறவுகளின் தவிர்க்க இயலா தேவைகளுக்கு கூட பத்து பைசா தர யோசிப்பவர்கள் திருமணத்திற்கு லட்சங்களை வெறும் ஆடம்பரதுக்கு வாரி இரைப்பது மனசீர்கேட்டின் உச்சம். 

பாசத்தால் தன் பிள்ளைகளுக்கு சிறப்பாக திருமணம் செய்ய வேண்டும் ஆசையால் துவங்கிய இந்த விளம்பர திருமணங்கள் அவன் செய்கிறான் என இவனும் இவன் செய்கிறான் என இன்னொருத்தனும் என சங்கிலி தொடராக இன்று எங்கோ போய் நிற்கிறது. மாட்டுக்கறி தின்றுவிட்டு மாதம் ஒரு மனைவி என்று திரிவது தவறாக கருதப்படாத மேற்குலகின் உடையான கோட்டை போட்டு வருவதும் வடக்கின் குர்தாவை போட்டு வருவதும் பெருமையாக நினைப்பது நாம் எவ்வளவு தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறோம் என்பதற்கு உதாரணம் மட்டுமல்ல அசிங்கமும் கூட. பிழைப்புக்குத்தான் அவன் ஆடைகளை உடுத்தி தொலையும் கட்டாயம் என்றால் திருமணத்திலும் இவை தேவைதானா?. நாளை அவர்கள் கலாசாரத்தில் நடக்கும் அவலங்களையும் நம் வாழ்வில் சந்தித்து/சகித்துக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட விளம்பர திருமணங்கள் தேவையா சொந்தங்களே?

“என்னடா பெருமை ஏகநாதா ன்னா, சோத்து பெருமை டா சொக்க நாதா” ன்னு சொன்னானாம். அதுதான் நினைவுக்கு வருகிறது!

ஆடம்பர திருமணங்கள் மாற வேண்டும். அந்த மாற்றம் சமூகத்தில் பிறரை கவரும் நிலையில்/அதிகம் கவனிக்கப்படும் / பொருளாதார வளம் உள்ள கொங்கு மக்களே முன்னெடுக்க வேண்டும். 

நம் மரபுகளும்-சடங்குகளும்தான் நமக்கு அடையாளம்-பெருமை. இன்று பணத்தையும், பதவியையும், ஆடம்பரத்தையும் முன்னிறுத்தியே கவுரவ ‘பிச்சை’ தீர்மானிக்கபடுகிறது. மாறாக இனி நம் மரபுகளையும் ஒழுக்கத்தையும் கொண்டு கவுரவம் கட்டப்பட வேண்டும்!

(இந்த பதிவு சிலரை புண்படுத்தும் என்பதும் விமர்சனங்களை கொண்டு வரும் என்பதும் தெரியும். மயிலிறகால் நீவி எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. இது நம் கொங்கு உறவுகளுக்குள் நல்லிணக்கம் வர தேவைப்படும் அவசிய மாற்றம்.

1 comment: